நெருப்பின் தேடல் !

குரங்கணி தீ விபத்தும் செய்தித் தீகளின் விபத்தும் நீயுட்டிரினோ நினைவலைகளும், ஓகி புயலும் ஓயாமல் என் உறக்கத்திலும் பயணப் பட்டுக் கொண்டே இருக்கின்றன !  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நீதி சொல்லும் நீதி மையங்களை நினைத்தால் உள்ளம் அஞ்சுகிறது, நம்பிக்கைகள் தற்கொலை செய்து கொள்கிறது..  இதோ அந்த நினைவலைகளிலிருந்து சில துளிகள் உங்களுக்காக

நெருப்பின் தேடல் !
 
காட்டுத் தீ என்றால்..
மாநகர உயிர்களின் இழப்பு என்றால்
செய்தியாகுது ! காட்டுத் தீ செய்தியாகுது !
அக்காட்டில் வாழ்பவன் என்றால்
அச்செய்திக்கும் தகுதியற்றுப் போகுது !
 
குரங்கணித் தீக்கும்
நீயுட்டிரினோவுக்கும் எந்த தொடர்பும் இல்லை !
வாய் கொடுத்து மாட்டிக் கொள்கிறார்கள் !
 
தீயிலிருந்தே காக்க முடியாதவன்..
கதிர் வீச்சுகளிலிருந்தும்
அணுச்சிதைவுகளிலிருந்தும்
நிச்சயம் காப்பான் ?
 
மீனவனை மீட்காத ஹெலிகாப்டர்கள்
மீட்டு விட வந்திறங்கின..
காட்டுத் தீயிலிருந்து உடல்களை !
 
மீட்டவர்கள் கணக்கு விரைவாகவும்
மாண்டவர்கள் கணக்கு மெதுவாகவும்
வந்து சேரும் இது தானே வரலாறு !
அதுவரை காத்திருப்பதில் என்ன தகராறு ?
 
மீட்ட உடல்களில் ஐந்து உடல்கள்
மூன்று உடல்கள் இரண்டு உடல்களென
அரசோடு தனியார் மருத்துவமனைகளும்
பங்கு போட்டுக் கொண்டன !
 
சிறு அசாதாரணத்தைக் காக்க இருக்கும்
தயார் நிலை இது தான் !
இதில் அசாதாரணமெல்லாம்
சாதாரணமென்று கொக்கரிப்புகள் வேறு !
 
இரவு பகலென தேடல் துவங்குது..
என் வீட்டிலும் என் சுற்றத்திலும்
வேறு ஊரிலிருக்கும் வீட்டுக்கா..?
வேறு வீடு தரும் வேறு நாட்டுக்கா ?
எங்கு போய் பிழைப்பது இனி என்று !
 

 

 

மேற்குத் தொடர்ச்சி மலையின் நினைவுகளுடன்

கருவெளி ராச.மகேந்திரன்

Advertisements

மலையிலும் என் மனதிலும் தீ !

மேற்குத் தொடர்ச்சி மலையிலமைந்திருக்கும் குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் மற்றும் உறவினர்,நண்பர்களுக்கு என் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  காயமுற்ற அனைவரும் விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்ப அனைவருடன் நானும் வாழ்த்துகிறேன் !

ஒவ்வொரு சாகச செயல் முடித்து திரும்பிய பின்பு தான் சொல்வதற்கு நானும் அந்த சாகசங்களும் இருக்கும் என்பதை மனதில் கொண்டே ஒவ்வொரு அசாதரண செயல்களில் பங்கெடுப்பதை நான் வழக்கமாக வைத்திருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொண்டு.. இதோ.. இந்த நிகழ்வு என்னுள் உடனே ஏற்படுத்திய தாக்கத்தின் சில நினைவலைகள் உங்களுடன்…

 

என் இரு(ற)ப்பை

உறுதி செய்ய

அழைப்பு வந்ததும் தான்

எனக்குத் தெரியும் !

நான் எப்போதும் வியந்த

என் கற்பனைக்கு ஊற்றாய்

ஊருக்கு மேற்கே உயர்ந்து நிற்கும்

அந்தக் மலையில்..

மீண்டும் காட்டுத் தீ என்பது..

 

ஊடகங்களில் இருந்து விலகி இருப்பது

உலகிலிருந்து விலகி இருப்பது போல்!

அந்த மலையில் பல நூறு முறைகள்

நானும் பார்த்துள்ளேன் காட்டுத் தீயை !

இன்னும் போல் என்றும் பரவியதில்லை

அந்தக் காட்டு தீ செய்தி.. காட்டுத் தீயாக !

 

அத்தீயைச் சுற்றி ஊரெல்லாம்

உலாவரும் பல கட்டுக் கதைகள் உண்டு!

சிறு சிறு தீப்பந்தங்களாய் காட்சியளித்த

தீச்சுவாலைத் தொடர்களை வைத்து

என் தந்தை சொன்ன கொல்லிப் பிசாசு

அதன் பயணக்கதைகள்

பீதியைக் கிளப்புது இப்போதும் !

 

இன்று இந்தத் தீ..

சிலரின் உயிரைப் எரித்துப் பறித்திருக்கு !

இன்னும் சிலரின் நிலை..

யாருக்கும் தெரியாமல் இருக்கு !

இதற்கு முன்பு தெரியாமலிருக்கு என்று

செய்தி சொல்லவும் நாதியின்றி

எரிந்து போன அவர்களைப் போலில்லை !

இந்தத் தெரியாத நிலை !

 

மேற்குத் தொடர்ச்சி மலையின்

அற்புத உயரம் என் கற்பனைக்கு ஊற்று !

காலையும் மாலையும்

அந்த மலையோடு கதிரவன் செய்யும்

வர்ண ஜாலங்கள்

கண் விட்டும் நெஞ்சம் விட்டும்

எப்போதும் நீங்கா அற்புதங்கள் !

 

அவற்றைத் தீட்டிட திறனின்றி..

வர்ணங்களின்றி வாய் திறந்து

வான் பார்த்து காலம் களித்திருந்த

அந்த நிமிடங்களை

உயிர்களை அது இருந்த உடல்களை

தனதாக்கிய காட்டுத் தீ..

களவாடிப் போகுமோ?

 

என் பெற்றோரின் கடந்த காலத்தை

கடந்து பழக.. பார்க்க..

தனி ஒருவனாய்..

இருபத்தொரு கிலோ மீட்டர் ஓட்டம்

அம்மலையில் ஓடி இரசித்த நிமிடங்களை..

இயற்கையோடு பழகப் போனவர்களை

இயற்கை எய்தச் செய்த

காட்டுத் தீ..

களவாடிப் போகுமோ?

 

அந்த மலை மூலம்..

ஒற்றைக் கேள்வியால்

மலையளவு மனதில் உயர்ந்து

நீண்ட நெடுங்காலம் உடன் பயணித்த

ஓர் உறவைத் தொலைத்தது போல்

காட்டுத் தீ களவாடிய உயிர்கள் தந்த

உள்ளத்து வலியைத் தொலைப்பேனோ ?

 

ஆம்.. எரியுது

காட்டுத் தீயும் !

என் உள்ளத் தீயும் !

கேள்விக்குப் பதில்களின்றி !

தீயோடு தீயாகிப் போனவர்களைப் போல்..

நானும் தீயோடு தீயாகிப் போவேனோ ?

நினைவுத் தீயோடு தீயாகிப் போவேனோ ?

 

மேற்குத் தொடர்ச்சி மலையின் நினைவுகளுடன்

கருவெளி ராச.மகேந்திரன்

மழை மேகமே வா.. வா..[பள்ளிக்குழந்தைகளுக்கான பாடல்]

இயற்கையோடும் மண்ணோடும் வளர்ந்த நமக்குள், நமக்கும் நம் மண்ணுக்கும் மக்களுக்குமான வாழ்வை பதிவு செய்வதில் பள்ளிப் பருவம் பெரும் பங்கு வகிக்கிறது.  அவ்வகையில் எனது பள்ளி ஆசிரியைகள், ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களையும் நன்றிகளையும் சொல்லிக் கொள்கிறேன்!

இதோ… நம் நிலை சொல்லும் இந்தப் பாடலை பள்ளி மாணவ மாணவியருக்கு சமர்ப்பிக்கிறேன், எனது ஆசிரியப்பெருமக்களின் ஆசியுடன்.

தனது பள்ளி மாணவியின் புகைப்படம் வழங்கி உதவிய அரசுப்பள்ளி ஆசிரியர் திரு. விஜயராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

2017103002

நன்றிகள் [ வடகிழக்கு பருவமழைக்கு]

பல ஆண்டுகளாக நிகழ்வது என்றாலும்.. நிகழும் போதெல்லாம் பிறந்ததற்கும் தமிழ் பயின்றதற்குமான திருப்தி வாழ்வை நிறைவு செய்து விடுகிறது.  மழை இல்லாமல் போகும் காலத்திலோ… மழை காலம் தாழ்த்தும் காலத்திலோ.. மழை வேண்டி எழுதுவதும் பொழிந்ததும் நன்றிகள் கூறி எழுதுவதும் எனக்கும் மழைக்குமான நீண்ட கால உணர்வுப்பூர்வ பயணம், வாழ்க்கை.  இம்முறையும் அது தொடருது வடகிழக்கு பருவமழையோடு.   இதன் பயனாக, பள்ளிக் குழந்தைகளுக்கான “மழை மேகமே வா.. வா..” என்ற பாடலையும் எழுதியுள்ளேன்.  அதை நாளை பகிர்கிறேன்.

அதுவரை அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

2017103003

PC: Google Images

வருமோ? [வடகிழக்கு பருவமழைக்காக]

கவிஞர்களும் படைப்பாளிகளும் தங்கள் உணர்வுகளை பதிவு செய்து போவது தான் வரலாற்றை அறிய பல கோணங்களை நமக்கு தந்து போகிறது போலும்.

சில சமயங்களில் நான் யோசிப்பதுண்டு, நமக்கு ஏன் இதனை பதிவு செய்ய வேண்டும் அல்லது எழுத வேண்டுமென்று தோன்றுகிறது?  பதில் கிடைப்பதே இல்லை.  புற உலகிலிருந்து தள்ளி இருந்தாலும் இது நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.  இதோ.. வானம் கருத்ததும்..  கருத்தரித்த சில வார்த்தைக் கோர்வைகள்..

கவி என்றால் பொய்யென்று என் மனம் ஒரு போதும் ஒப்புக் கொண்டதே இல்லை.. அது மண்ணையும், மக்களையும் அவர்தம் வாழ்வையும் பதிவு செய்யவே.  அப்படி செய்யவில்லை என்றால், அது எத்தனை சிறந்ததாய் இருந்தாலும் எனக்கு வேண்டாம்.

2017102802