நாடு – நாலு சொல்லில் கேட்டு மகிழுங்கள்

வீடியோ

 

நீரறிவீரோ?

இந்த மாதத்தின் 150 வது பக்கத்தில்… இதைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்..

குடிநீர் பிரச்சனையை பேசும் வரிகள், அரசின் நிலை, கேள்விகள் குறித்து என பன்முகத்துடன் 150வது பக்கம் உள்ளது.

தொடர்ந்து (சு)வாசித்திருங்கள்

2017051902

உன் தாய் மொழி என்ன?

இது கவிதையல்ல… இது நிகழ்வு, இது எங்கள் வாழ்க்கை, இது எங்கள் உரிமை… அடக்குமுறைகளுக்கு அடங்கா தாகம் கொண்டவர்கள் தொடர்ந்து பருகலாம்…..

 

உன் தாய்மொழி என்ன?

 

வகுப்புகள் முடிந்து

வெளியில் வந்தோம் அனைவரும்!

வகுப்புகள் என்றதும்

பள்ளி வகுப்புகள் என்றெண்ணிடாதீர்!

பள்ளியைக் கடந்த வகுப்புகள்!

அவரவர் விருப்பப்படி பிரிந்தோம்!

அதிலும் பல குழுக்கள்!

 

எங்கள் குழுவில் ஐவர்..

இது அந்த ஐவர் குழுவல்ல..

ஆந்திரா உணவகத்தை நோக்கி

மதிய உணவுக்கு படையெடுக்கும்

அப்பாவி ஐவர் குழு.. அவ்வளவே!

குறிப்பெடுக்க.. அப்பாவி எனும் சொல்

அர்த்தமற்றது பல நேரங்களில்!

அது இந்த ஐவர் குழுவுக்கும் பொருந்தும்!

 

சொல்ல மறந்து விட்டேன்

ஆந்திரா உணவகமிருப்பது.. தமிழகத்தில்..

இப்போதைக்குத் தவிர்த்திடுவீரே!

அவர்கள் ஆந்திராவா?  இல்லை

தெலுங்கானாவா? என்ற கேள்விகளை

 

முதலில் அந்த உணவகத்தை

அறிமுகம் செய்தவர்..

ஊருக்கே உணவளித்த..

தஞ்சை மண்ணின் மைந்தன்..

தஞ்சையின் தற்போதைய நிலை

என்னிடம் கேட்பீரோ?

அதை தரிசாக்க தரம் கெட்ட

அரசியல்வாதிகளின் கூத்தை

நித்தம் நீரே அறிவீரே!

 

அரசியல் பேசும் தகுதியில்லை

தமிழகத்தில் பிறந்த எனக்கு!

ஏன் என்ற கேள்விக்கு பதில்..

கடந்த அறுபதாண்டு வரலாறு

ஒற்றைச் சாட்சியாய்!

அது கிடக்கட்டும் விடுங்கள்!

 

அறிமுகம் செய்தவரின் அனுபவங்கள்

அனுபவித்து இரசிக்கக் கூடியவை!

ஆனால் அந்த அனுபவமல்ல

நான் சொல்ல வருவது..

 

இருக்கைகளின் வசதிக்கேற்ப

மூன்று, இரண்டாய் பிரிந்தது

உணவுக்காக வந்த ஐவர் குழு!

இருக்கைகளின் ஆதிக்கம்

அகிலமெல்லாம் ஆட்டிப் படைக்கிறது!

அதில் அனைவருக்கும் சொல்ல

ஆயிரம் கதையிருக்கு..

 

அந்த இருக்கைகள் அறிந்த அளவு

நாம் யாரும் அறியோம்..

அந்த இருக்கைகளின் வரலாற்றை!

ராஜாவாயிருந்தாலும் ராஜமெளலியால்

எழுதி முடித்து விடமுடியாது!

மகிழ்மதியின் சிம்மாசனம்

மகேந்திர பாகுபலிக்கே நிரந்தரமென!

 

ஆந்திரா உணவகத்தின் தாக்கமென்றோ

பாகுபலியின் தாக்கமென்றோ

கருத வேண்டாம்…

இது இருக்கைகளின் தாக்கம்!

வீண் விவாதங்கள் வேண்டாம்..

நிகழ்வுக்கு வருவோம்..

 

உணவகத்தின் முதலாளிக்கு

சிறு வருத்தம் தான்

தனியே கறி வேண்டுமா? – என்ற

கேள்வியை காதிலும், அதோடு

ஏதும் வாங்காததால்!

 

அவர் ஆசை நிறைவேற்ற

இன்னொரு மூவர் குழு வந்து சேர்ந்தது!

மீனும் முட்டைகளும்

கேட்டு வாங்கினார்கள் அவர்கள்!

 

இது தான் தருணம்..

வந்தேறிகளில் (மூவர் குழுவில்) ஒருவர்

ஹிந்தியில் துவங்கினார் பேச்சை!

முதலில் பிரிந்த ஐவர் குழுவில் ஒருவருடன்!

அங்கு தான் நானும் அமர்ந்திருந்தேன்!

அமர்ந்து மட்டும் இருந்திருக்க வேண்டும்!

 

அரைகுறையாய் தெரிந்திருந்த ஹிந்தியால்

அவர்கள் சொன்ன நகைச்சுவைக்கு

நானும் சிரித்து விட்டேன்!

அதன் பின்னே.. அங்கே

வெப்பம் அதிகரித்து விட்டது!

மதிய உணவு சூடாயிருந்ததென்னவோ

உண்மையிலும் உண்மை தான்!

ஆந்திரா உணவு காரமென்பதும்

சத்தியத்திலும் சத்தியம் தான்!

ஆனால் அவை மட்டுமல்ல காரணம்!

 

உனக்கெப்படித் தெரியும் ஹிந்தி?

இருவரும் ஒற்றைக் குரலில்..

உங்க ஊருல..

பிழைப்புக்காக வந்த போது

கற்றதென்றேன்!

முடித்து மூச்சு விடுவதற்குள்!

ஏன் தேசிய மொழியை

எப்போதும் எதிர்க்கிறீர்கள்?

என்னிடமிருந்த கேள்வி..

மாநிலத்திற்கே தாவி விட்டது..

பெரிய பாய்ச்சல்!

 

மீண்டும் மீண்டும் கேட்டேன்..

இந்தியை எதிர்க்கிறோமா?

இந்தி திணிப்பை எதிர்க்கிறோமா?

அட, இந்தக் கேள்வி அவர்களுக்கில்லை..

எனக்கு நானே கேட்டுக் கொண்டது.

அவர்களுக்கு வேறு கேள்வி இருந்தது என்னிடம்!

 

அது,

உன் தாய்மொழி என்ன?

ஒருவர் தடுமாறிப் போனார்!

இன்னொருவர் கொஞ்சம் கோபத்துடன்

ஹிந்தி என்றார்..

நிதானித்து சொன்னார்.. தடுமாறியவர்

ஹிந்தி தான் என் தாய்மொழி என்று!

 

என்னை இன்னும் யோசிக்கச் செய்தன

அவர்களின் பதில்கள்!

அதற்குள் தயாரானது எனக்குள்

இன்னொரு கேள்வி..

வரக்கூடும் கோபம் யாவருக்கும்

கேள்விகளால்.. – அதுவறிந்தே

இக்கேள்வியே இறுதியான

கேள்வியென உள்ளத்தில் சொல்லி..

அவர்களிடம் கேட்டேன்!

 

கேள்வி என்னவென்று தானே

கேட்கிறீர்கள்?

உங்க அம்மாவும் உங்க பாட்டியும்

என்ன மொழி பேசுவாங்க?

இந்தக் கேள்விக்கான பதில்..

எனக்குச் சாதகமாய்..

பிறகென்ன..

நாம் ஏன் எதிர்க்கிறோம்?

“இந்தி திணிப்பை” – அதை

தனியே விளக்க அவசியமின்றி போனது!

 

ஆனால்..

அவர்கள் கேட்கத் துவங்கினார்கள்.

இந்தி தான் தாய்மொழினு

நம்பி இருக்கிறோம்!

எங்களுடைய பள்ளி நாட்களிலிருந்தே

ஏன்?  எப்படி?

 

அட,

எங்கள் தாயின் பாட்டிகளின்

மொழி இல்லை..

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலக,

வேலை வாய்ப்பு விண்ணப்பங்கள்

அத்தனையிலும்..

தாய் மொழியை நிரப்பவோ..

தேர்வு செய்யவோ சொல்லப்பட்ட

அத்தனை இடங்களிலும்!

ஏன்?

 

அவர்கள்

கேட்டுக் கொண்டே இருந்தார்கள்..

கேள்விகளை..

நானும் கேட்டுக் கொண்டே இருந்தேன்..

சுதந்திர வேட்கையின் குரலை..

விழித்துக் கொண்டது..

வினா.. அவர்களுக்குள்..

 

உணவால் வயிற்றை நிறைத்து

உணர்வுகளால் உள்ளம் நிறைத்து

குழுக்களாக.. பிறகு

தன்னந்தனியாக நடந்தோம்!

சுதந்திரத்தின் வேட்கை உடன் தொடர்ந்திட!

 

உலகத்தின் ஓர் மொழி

அன்படா..

அதற்கு வேறு மொழி

வேண்டாமடா..

இதில் திணித்தாலும் எம்மொழியும்

நிலைக்குமோடா?

 

இம்மண்ணின்

தாய்மார்களின் பாட்டிமார்களின்

தந்தைமார்களின் பாட்டனார்களின்

மூதாதையார்களின்.. மூதாட்டிகளின்..

“யாதும் ஊரே! யாவரும் கேளீரென்ற..

அவர் சுவாசம் மூச்சுக் காற்றில் பரவ..

ஒவ்வொரு அடியாய் முன்னெடுத்தேன்!

ஆதிக்கம் தலை தூக்கும்

அவ்விடத்தை நோக்கியே பயணிக்கும்

அக்னி குஞ்சொன்றை சுமந்தபடி!

அன்புடன்

கருவெளி

அவனும் நானும் அவளும்!

அன்புடையீர்…

வணக்கம்…  சில நிகழ்வுகளை எழுத்துக்குள் கொண்டு வருவது மிகவும் சுவாரஷ்யமானது. அத்தகைய நிகழ்வொன்று… நீங்கள் எதிர்பாரா தலைப்புடன்.. வாசித்து அனுபவித்திடுங்கள்..

201705051501

அவனும் நானும் அவளும் – கருவெளி

 

அழைப்பு அவளிடமிருந்து தான்

அதை எடுத்திட மனமில்லை தான்!

ஆனாலும் எடுத்தேன்..

 

நினைத்தது போலவே..

அவள் அவனைத் தான் கேட்டாள்!

இல்லை என்று வைக்க முயல்கையில்!

இதுவே இறுதி அழைப்பு..

அவனிடம் கொடு என்றாள்..

 

இது போல்.. இருநூறு முறைகள்

நானே கேட்டிருப்பேன்..

இருந்தும் அவள் குரல்

இம்முறை வேறு விதமாக இருந்தது!

 

அவனுக்கு சைகை செய்தேன்..

அவனும் ஆமோதித்தான்!

கைபேசி கைமாறியது..

அவன் கைகளில், என் கைபேசியும்

என் வாழ்வும்; அவள் வாழ்வும்..

 

அவன் செவி மடல்களை

என் கைபேசி தீண்டுகையில்

என் இதயம் துடிப்பை துண்டித்து

மீண்டும் துவங்கியது.. இரட்டிப்பு வேகத்தில்!

 

ஆச்சர்யம்! அவன் பேசவில்லை..

நான் எதிர்பாராதது..

இருபது ஆண்டுகளின் மெளனம்

இன்றும் உடையாமலா?

அவள் குரல் எனக்கு கேட்கவேயில்லை!

 

அவன் சம்மதிப்பதாய் தலையசைத்தான்

எனக்குத் தலை சுற்றியது..

வேண்டாமென்று தலையசைத்தேன்..

சரி என்று வாய் திறந்தான்..

மரமிழந்த இலையாய் தரையில் வீழ்ந்தேன்!

 

கண் விழிக்கையில்

கண் எதிரே அவளிருந்தாள்!

காண விரும்பாமல் கண் மூடுவதற்குள்

கட்டிக் கொண்டு அழுதாள்!

 

தள்ளி விட முயன்றேன்

முடியவில்லை..

இருவரையும் கட்டிக் கொண்டிருந்தான்

அவன் தன் அன்புக் கரங்களால்..

 

கதறி அழுதபடிக் கேட்டேன்..

கருவில் கலைக்கத் துடித்தாயோ?

அடுத்த வார்த்தை வருவதற்குள்

அவன் கரங்கள் என் இதழ்களில்

அன்புச் சாயங்கள் பூசியது!

 

பெண் சிசு என்றாலும்

உன் கருவை கலைக்காதே!

அதுவே உன் தாயுக்கு

நீ தரும் பரிசு என்றான்!

 

மீண்டும் அவளோடு அவன்!

அவனோடு எக்கணமும் போல் நான்!

எப்போதும் தாயில்லா மகளில்லை நான்!

அவன் என் தாயுமானவன்!

 

அதே இலை தான்..

ஒரே இலை தான்… கற்பனைகள் தான் வேறு…  ஒன்று இலையின் தீர்க்கமாகவும் மற்றொன்று தலைவியின் ஏக்கமாகவும்..

உங்கள் மொபைல் போனை அலங்கரிக்கும் இந்த வரிகள்.. என்று நம்புகிறேன்..

This slideshow requires JavaScript.

உழைப்பவர் தினம்

மே மாதத்தின் முதல் நாள்..  முதல் வார்த்தை உழைப்பவரன்றி வேறு என்ன இருக்க முடியும்?

உங்கள் அனைவருக்கும் உழைப்பவர் தின வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்..  உங்கள் உழைப்பாலே இந்த உலகம் இத்தனை சிறப்பான மாற்றங்களை கண்டுள்ளது..

This slideshow requires JavaScript.

 

கண்மணியே

வார்த்தைகளின் பொருள் ஒவ்வொருவர் கற்பனையிலும் மாறுபடும் என்பதற்கு ஒரு சிறு உதாரணமாய் இருக்கட்டும் என்று இந்த சிறு முயற்சி..  இரண்டையும் வாசியுங்கள்… உங்கள் அனுபவத்தை பகிர நினைத்தால்…  இங்கே குறிப்பிடுங்கள்..

karuveli2017042704

கண்மணியே – – கருவெளி ராச.மகேந்திரன்

karuveli2017042705

பூமிக்கும் ஒரு நாள்

உலக பூமி தினமான இன்று (22 – 04 -2017) வெப்ப நிலை அதிகரித்துக் கொண்டே செல்லும் பூமியிலிருந்து அதற்கு முக்கியக் காரணமான ஓர் இனத்தை சேர்ந்தவன் என்ற முறையில் என் எண்ணத்தில் தோன்றியவைகள் இங்கே உங்களுக்காக… “பூமிக்கும் ஒரு நாள்”  என்ற தலைப்பில்..

karuveli2017042201

பூமிக்கும் ஒரு நாள் – கருவெளி ராச.மகேந்திரன்

விரைவில் புத்தகவடிவில் உங்கள் கரங்களில் தவழவிருக்கும் 4 சொல்லில் புத்தகம் குறித்து அறிந்து கொள்ள இணைந்திருங்கள்.. முகநூல் பக்கத்தில்

https://www.facebook.com/4Sollil/

உலக தண்ணீர் தினம் – நடை பயணம்

அனைவருக்கும் உலக தண்ணீர் தின நல்வாழ்த்துக்கள் (22 – 03-2017).

நீரெடுக்க நெடுந்தூரம் அலைந்து செல்லும் ஒரு உயிரென என்னை நானே பாவித்து… நீரின்றி… 10 கி.மீட்டர் தூரம் நடை பயணம்..
 
நீரின் தேவையை அறிந்து கொள்ள நீங்களும் முயற்சித்து தான் பாருங்களேன்…  உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்…  (நாளையே செய்ய வேண்டுமென்றில்லை… செய்து பாருங்கள் வாய்ப்பு கிடைக்கும் போது, நாளை நமது இளைய தலைமுறை அத்தகைய நிலையை அடைந்து தவிக்காமல் தடுக்க உதவலாம் அந்த அனுபவம், இன்று இந்நிலையில் தவிக்கும் பில்லியன் மக்களைப் பற்றி சிந்திக்க உதவலாம் அந்த அனுபவம்)
உலக தண்ணீர் தினத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள
AM I A WASTER - For The Cause Walk
அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்

 

மகளிர் தின சிறப்பு சிந்தனைகள் (நாலு சொல்லில் தொகுப்பிலிருந்து)

நேற்றே பெண்கள் தின சிறப்புக் கவிதையை எழுதி வெளியிட்டு விட்டாலும் அவர்கள் சந்திக்கும் சவால்களை எழுதாமல் தூங்க முடியாதென்றே தோன்றியது.  இந்தக் கொண்டாட்ட நிமிடத்தில் அத்தகைய கருத்துக்களை வெளியிட வேண்டாமென்று என்னுடனே வைத்துக் கொண்டிருக்கையில், என் அம்மாவுடனான உரையாடல் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளச் செய்தது. மிகவும் வலியை சொல்லாத சில சிந்தனைகள் மட்டும் உங்களுக்காக #4சொல்லில் தொகுப்பிலிருந்து..

குறிப்பாக மகளிர் தினத்திற்காக வாழ்த்துக் கவிதைகளை தேடி தளத்திற்கு வருகை தரும் உள்ளங்கள் என்னை மன்னிக்கவும்…  இந்த வரிகள் வாழ்த்தப் பயன்படாது..

 

karuveli2017030801

அவளும் நானும் – கருவெளி ராச.மகேந்திரன்

PC: Google Images


சமூகத்தின் கண்ணாடியாகும் படைப்புகளை படைத்திடும் முயற்சியாய்

கவியோடு ஒரு பயணத்தில் இணைந்து பயணிக்க உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.  உங்களுக்கு பிடித்த தலைப்புகளில், கருப்பொருளில் கவிதைகளை வாசிக்க வாய்ப்புண்டு கவியோடு ஒரு பயணத்தில் , மேலும் அறிந்து கொள்ள

https://goo.gl/forms/eAs8o1vTsnVliJcJ3

கருவெளி ராச.மகேந்திரன்