ஆதங்கம் [வாசகர் விருப்பம்]

இன்று,  இந்த மாதத்தின் 100வது பக்கத்தை எழுதுகையில்… வாசகர் விருப்பத் தலைப்பை கேட்டதில் மிகவும் வித்தியாசமான தலைப்புகள் வந்தடைந்தன.  அதில் திரு.கார்த்திகேயன்  அவர்கள் கேட்டிருந்த  ஆதங்கம் என்ற தலைப்புக்காக எழுதிய வரிகள்.. இதோ.. உங்களுக்காக..

மற்ற விருப்பங்களையும் விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்

உங்களுக்கான விருப்பங்களை தெரிவிக்க..

https://goo.gl/forms/eAs8o1vTsnVliJcJ3

2017091004

Advertisements

உயிராகும் உணவே – நாலு சொல்லில் புத்தகத்திலிருந்து

வீடியோ

அன்புடையீர்,

நம் உணவில் உயிருக்கு, நம் உயிர் மட்டுமல்ல. நம்மை போன்ற பலரின் உயிரும் தான். ஆகையால் எத்தகைய சூழலிலும் உணவை வீணடிப்பதை தவிர்ப்போம்.

 

 

ஒலிப்பதிவை கேட்க..

உன் தாய் மொழி என்ன?

இது கவிதையல்ல… இது நிகழ்வு, இது எங்கள் வாழ்க்கை, இது எங்கள் உரிமை… அடக்குமுறைகளுக்கு அடங்கா தாகம் கொண்டவர்கள் தொடர்ந்து பருகலாம்…..

 

உன் தாய்மொழி என்ன?

 

வகுப்புகள் முடிந்து

வெளியில் வந்தோம் அனைவரும்!

வகுப்புகள் என்றதும்

பள்ளி வகுப்புகள் என்றெண்ணிடாதீர்!

பள்ளியைக் கடந்த வகுப்புகள்!

அவரவர் விருப்பப்படி பிரிந்தோம்!

அதிலும் பல குழுக்கள்!

 

எங்கள் குழுவில் ஐவர்..

இது அந்த ஐவர் குழுவல்ல..

ஆந்திரா உணவகத்தை நோக்கி

மதிய உணவுக்கு படையெடுக்கும்

அப்பாவி ஐவர் குழு.. அவ்வளவே!

குறிப்பெடுக்க.. அப்பாவி எனும் சொல்

அர்த்தமற்றது பல நேரங்களில்!

அது இந்த ஐவர் குழுவுக்கும் பொருந்தும்!

 

சொல்ல மறந்து விட்டேன்

ஆந்திரா உணவகமிருப்பது.. தமிழகத்தில்..

இப்போதைக்குத் தவிர்த்திடுவீரே!

அவர்கள் ஆந்திராவா?  இல்லை

தெலுங்கானாவா? என்ற கேள்விகளை

 

முதலில் அந்த உணவகத்தை

அறிமுகம் செய்தவர்..

ஊருக்கே உணவளித்த..

தஞ்சை மண்ணின் மைந்தன்..

தஞ்சையின் தற்போதைய நிலை

என்னிடம் கேட்பீரோ?

அதை தரிசாக்க தரம் கெட்ட

அரசியல்வாதிகளின் கூத்தை

நித்தம் நீரே அறிவீரே!

 

அரசியல் பேசும் தகுதியில்லை

தமிழகத்தில் பிறந்த எனக்கு!

ஏன் என்ற கேள்விக்கு பதில்..

கடந்த அறுபதாண்டு வரலாறு

ஒற்றைச் சாட்சியாய்!

அது கிடக்கட்டும் விடுங்கள்!

 

அறிமுகம் செய்தவரின் அனுபவங்கள்

அனுபவித்து இரசிக்கக் கூடியவை!

ஆனால் அந்த அனுபவமல்ல

நான் சொல்ல வருவது..

 

இருக்கைகளின் வசதிக்கேற்ப

மூன்று, இரண்டாய் பிரிந்தது

உணவுக்காக வந்த ஐவர் குழு!

இருக்கைகளின் ஆதிக்கம்

அகிலமெல்லாம் ஆட்டிப் படைக்கிறது!

அதில் அனைவருக்கும் சொல்ல

ஆயிரம் கதையிருக்கு..

 

அந்த இருக்கைகள் அறிந்த அளவு

நாம் யாரும் அறியோம்..

அந்த இருக்கைகளின் வரலாற்றை!

ராஜாவாயிருந்தாலும் ராஜமெளலியால்

எழுதி முடித்து விடமுடியாது!

மகிழ்மதியின் சிம்மாசனம்

மகேந்திர பாகுபலிக்கே நிரந்தரமென!

 

ஆந்திரா உணவகத்தின் தாக்கமென்றோ

பாகுபலியின் தாக்கமென்றோ

கருத வேண்டாம்…

இது இருக்கைகளின் தாக்கம்!

வீண் விவாதங்கள் வேண்டாம்..

நிகழ்வுக்கு வருவோம்..

 

உணவகத்தின் முதலாளிக்கு

சிறு வருத்தம் தான்

தனியே கறி வேண்டுமா? – என்ற

கேள்வியை காதிலும், அதோடு

ஏதும் வாங்காததால்!

 

அவர் ஆசை நிறைவேற்ற

இன்னொரு மூவர் குழு வந்து சேர்ந்தது!

மீனும் முட்டைகளும்

கேட்டு வாங்கினார்கள் அவர்கள்!

 

இது தான் தருணம்..

வந்தேறிகளில் (மூவர் குழுவில்) ஒருவர்

ஹிந்தியில் துவங்கினார் பேச்சை!

முதலில் பிரிந்த ஐவர் குழுவில் ஒருவருடன்!

அங்கு தான் நானும் அமர்ந்திருந்தேன்!

அமர்ந்து மட்டும் இருந்திருக்க வேண்டும்!

 

அரைகுறையாய் தெரிந்திருந்த ஹிந்தியால்

அவர்கள் சொன்ன நகைச்சுவைக்கு

நானும் சிரித்து விட்டேன்!

அதன் பின்னே.. அங்கே

வெப்பம் அதிகரித்து விட்டது!

மதிய உணவு சூடாயிருந்ததென்னவோ

உண்மையிலும் உண்மை தான்!

ஆந்திரா உணவு காரமென்பதும்

சத்தியத்திலும் சத்தியம் தான்!

ஆனால் அவை மட்டுமல்ல காரணம்!

 

உனக்கெப்படித் தெரியும் ஹிந்தி?

இருவரும் ஒற்றைக் குரலில்..

உங்க ஊருல..

பிழைப்புக்காக வந்த போது

கற்றதென்றேன்!

முடித்து மூச்சு விடுவதற்குள்!

ஏன் தேசிய மொழியை

எப்போதும் எதிர்க்கிறீர்கள்?

என்னிடமிருந்த கேள்வி..

மாநிலத்திற்கே தாவி விட்டது..

பெரிய பாய்ச்சல்!

 

மீண்டும் மீண்டும் கேட்டேன்..

இந்தியை எதிர்க்கிறோமா?

இந்தி திணிப்பை எதிர்க்கிறோமா?

அட, இந்தக் கேள்வி அவர்களுக்கில்லை..

எனக்கு நானே கேட்டுக் கொண்டது.

அவர்களுக்கு வேறு கேள்வி இருந்தது என்னிடம்!

 

அது,

உன் தாய்மொழி என்ன?

ஒருவர் தடுமாறிப் போனார்!

இன்னொருவர் கொஞ்சம் கோபத்துடன்

ஹிந்தி என்றார்..

நிதானித்து சொன்னார்.. தடுமாறியவர்

ஹிந்தி தான் என் தாய்மொழி என்று!

 

என்னை இன்னும் யோசிக்கச் செய்தன

அவர்களின் பதில்கள்!

அதற்குள் தயாரானது எனக்குள்

இன்னொரு கேள்வி..

வரக்கூடும் கோபம் யாவருக்கும்

கேள்விகளால்.. – அதுவறிந்தே

இக்கேள்வியே இறுதியான

கேள்வியென உள்ளத்தில் சொல்லி..

அவர்களிடம் கேட்டேன்!

 

கேள்வி என்னவென்று தானே

கேட்கிறீர்கள்?

உங்க அம்மாவும் உங்க பாட்டியும்

என்ன மொழி பேசுவாங்க?

இந்தக் கேள்விக்கான பதில்..

எனக்குச் சாதகமாய்..

பிறகென்ன..

நாம் ஏன் எதிர்க்கிறோம்?

“இந்தி திணிப்பை” – அதை

தனியே விளக்க அவசியமின்றி போனது!

 

ஆனால்..

அவர்கள் கேட்கத் துவங்கினார்கள்.

இந்தி தான் தாய்மொழினு

நம்பி இருக்கிறோம்!

எங்களுடைய பள்ளி நாட்களிலிருந்தே

ஏன்?  எப்படி?

 

அட,

எங்கள் தாயின் பாட்டிகளின்

மொழி இல்லை..

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலக,

வேலை வாய்ப்பு விண்ணப்பங்கள்

அத்தனையிலும்..

தாய் மொழியை நிரப்பவோ..

தேர்வு செய்யவோ சொல்லப்பட்ட

அத்தனை இடங்களிலும்!

ஏன்?

 

அவர்கள்

கேட்டுக் கொண்டே இருந்தார்கள்..

கேள்விகளை..

நானும் கேட்டுக் கொண்டே இருந்தேன்..

சுதந்திர வேட்கையின் குரலை..

விழித்துக் கொண்டது..

வினா.. அவர்களுக்குள்..

 

உணவால் வயிற்றை நிறைத்து

உணர்வுகளால் உள்ளம் நிறைத்து

குழுக்களாக.. பிறகு

தன்னந்தனியாக நடந்தோம்!

சுதந்திரத்தின் வேட்கை உடன் தொடர்ந்திட!

 

உலகத்தின் ஓர் மொழி

அன்படா..

அதற்கு வேறு மொழி

வேண்டாமடா..

இதில் திணித்தாலும் எம்மொழியும்

நிலைக்குமோடா?

 

இம்மண்ணின்

தாய்மார்களின் பாட்டிமார்களின்

தந்தைமார்களின் பாட்டனார்களின்

மூதாதையார்களின்.. மூதாட்டிகளின்..

“யாதும் ஊரே! யாவரும் கேளீரென்ற..

அவர் சுவாசம் மூச்சுக் காற்றில் பரவ..

ஒவ்வொரு அடியாய் முன்னெடுத்தேன்!

ஆதிக்கம் தலை தூக்கும்

அவ்விடத்தை நோக்கியே பயணிக்கும்

அக்னி குஞ்சொன்றை சுமந்தபடி!

அன்புடன்

கருவெளி

ஓயாதீர் எம் தோழரே

சில எழுத்துக்களை மனம் எதிர்மறை சிந்தனை என ஒதுக்கி தள்ளத்தான் செய்கிறது!  ஆனால் பாவம் நேர்மறை சிந்தனைகளுக்கோ, நிகழ்வுகளுக்கோ, வரலாற்றிடமோ அதை  நிரூபிக்க குறைந்தது ஒரு ஆதராம் கூட இல்லை.  இவர்களுக்கு என்ன தான் வேண்டும் சாமாணியனிடமிருந்து ?…

karuveli2017012902

விரட்டி விட்டோம்!

ஓடி விட்டார்கள் என

ஓய்ந்து விடாதீர்கள்!

வேறு வேசம் போட்டு

வேறு வழிகளில்

மீண்டும் மீண்டும் வருவார்கள்

நம் இரத்தத்தை குடிக்க!

இனிய தைத்திரு நாள் நல்வாழ்த்துகள்

தைப் பொங்கல் வாழ்த்துகள்

அனைவருக்கும் இனிய தைத்திரு நாள் நல்வாழ்த்துகள்.

இத்தருணத்தில்  தங்கள் அனைவரிடமும் ஒரே ஒரு வினாவை மட்டும் விட்டுச் செல்கிறேன்.

வையகத்தில் வாழும் உயிர்களையெல்லாம் வாழ்விக்க, தம் வாழ்வை தியாகம் செய்து உழவு செய்யும் உழவர்க்காகவும் உழவுக்காகவும் நாம் என்ன செய்யப் போகிறோம்?

தற்சமயம் நிகழும் நிகழ்வுகளையும் எதிர் காலத்தில் நமக்காக காத்திருக்கும் நிகழ்வுகளையும் நினைவில் கொண்டு இவ்வினா குறித்து சிந்தியுங்கள். வாருங்கள் செயலில் இறங்குவோம் இனியும் தாமதம் ஏதுமின்றி…

உழவுக்கு

நாம் ஒவ்வொருவரும் உயிர் வாழ உணவு அவசியமென நான் சொல்லத் தேவையில்லை.  அதைக் கொடுத்து நம்மை எல்லாம் உயிர் வாழச் செய்து விட்டு நாளும் தன் உயிரை தியாகம் செய்யும் உழவர்கள் உலகெங்கும் நிறைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு கை கொடுக்க நம் உள்ளம் இதுவரை துடிக்காதது ஏன் என்று மட்டும் தெரியவில்லை.   உணவுப் பொருட்களின் விலை கூடுகிறது… ஆகையால் அதிகம் பணம் சம்பாதிக்க வேண்டுமென்பதே நம் இதயத் துடிப்பாய் இருப்பதாலா?

இந்த உழவுத் திருநாளாம் தைத்திருநாளில் நம் இதயத்தை அவர்களுக்காக துடிக்கச் செய்யத் துவங்குவோம்.  இதை நாமாக செய்தால் வரும் தலைமுறை நம்மை போற்றும்.  தவறினால், கவலையை விடுங்கள் வருங்காலம் நம்மை கட்டாயப்படுத்தி நம்மையும் உழவனாக்கும் (விவசாயி ஆக்கும்).  அதுவரை காத்திருப்பீர்களா? இல்லை..

karuveli2017011101

 

அவனோடு ஒரு பயணம்

இனி, களவு கொடுக்கப்பட்ட சாமானியனின் வாழ்வு சாத்தியமில்லை.   ஆனால் சிலருக்கு எல்லாம் சாத்தியமாகப் போகிறது.  600 வார்த்தைகளால் ஒரு சிறு நிகழ்வை அதற்கு உதாரணமாய் உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.. உங்கள் கருத்துக்களை நீங்கள் எழுதுங்களேன்…

அன்புடன் – கருவெளி ராச.மகேந்திரன்

karuveli_02on

 

புறப்படும் போது

கழற்றி விட்டிருந்த

சட்டையின் பொத்தான்கள்

பூட்டப் பட்டிருந்தன!

 

ஓடி வந்து பிடித்த

சன்னல் ஓர இருக்கையின்

கண்ணாடி கதவுகள்

நன்கு அடைக்கப் பட்டிருந்தன!

 

தனித்தனியே தன்னிடத்திலிருந்த

இரு கரங்களும், இணைபிரியாமல்

ஒன்றோடொன்று உறவாடி

நெஞ்சைப் பாதுகாத்திருந்தன!

 

உள்ளாசமாக வந்து போக

சிறப்பான இடம் தான்..

பிழைப்பு நடத்த வருவதற்கு

சிறப்பான் இடம் தான்

சில மாதத்திற்கு முன்பு வரை!

 

 

நடத்துநரிடம் கேட்டு

இறங்க வேண்டிய இடத்தில்

இறங்கினேன்! – இல்லையில்லை

இறக்கி விடப் பட்டேன்!

இது வழக்கமான இடமில்லை

அது எனக்குச் சாதகமாகும்!

 

 

பத்து நிமிட நடை தூரத்தில்

நான் செல்ல வேண்டி இடத்திற்கு

பேருந்து கிட்டும்! – நடக்கத் துவங்கினேன்

ஈராறு பாதங்கள் எனைத் தொடர்வதறியாமல்!

 

ஆட்டோக்கார அண்ணன்மார்கள்

தங்கள் வலையை வீசியபடியே!

வலையில் சிக்காமல்

உயிர் பிழைத்த மீனாய்

நீந்திக் கடந்தேன்

முதல் அஞ்சு நிமிடத்தை!

 

 

வேகமாக நடந்தும்

அப்பேருந்து வேகமாய் கடந்தது

அதைப் போல்

ஆரேழு அங்கிருந்தும்

அப்பேருந்தை தவற விட்டதெண்ணி

என்னை நானே கடிந்து கொண்டேன்!

 

 

கதிரவன் வரவில்லை..

காலை இருள் இன்னும்

சாலையிலிருந்து விடை பெறவில்லை

அங்குமிங்குமாக மக்கள் கூட்டம்

அதற்குள்ளே பரபரப்பாய்!

 

 

வெளியே சொல்ல இயலா

உள்ளத்துப் பயம் மட்டும்

உடலுக்கு உஷ்ணமளித்தது!

உடன் சேர்ந்து கொண்டது

உள்ளூர் வாகனங்களின் வெப்பம்!

 

எத்தனை குளிரிருந்தாலும்

ஏறப் போகும் வாகனமும்

குளிரூட்டப் பட்டதே!

ஏறி அமர்ந்தாயிற்று!

வாகனம் புறப்படுமுன்னே

நடத்துநரைத் தேடி

ஒரு நாளுக்கான அனுமதிசீட்டை

வாங்கி விட்டேன்! – ஆ!

இனி ஒரு மணி நேரம் தூங்கலாம்!

 

 

கண் மூடு முன்னே..

ஒரு முறை சுற்றிப் பார்த்தேன்

பேருந்தில் நான் மட்டும் தான்!

அடி வயிற்றில் ஏதோ செய்தது!

கடந்த வாரச் செய்தி

இந்நகரத்தை பற்றிய பயத்தை

இன்னும் அதிகப் படுத்தியது!

 

 

அவனைக் கூப்பிடலாமென்று

கைபேசி எடுத்தேன்!

அவனே அழைத்திருந்தான்

ஆறு நிமிடங்களுக்கு முன்!

அட! பத்து நிமிடங்களுக்கு முன்பு

இன்னொருவனிடமிருந்தும் அழைப்பு!

 

 

அவன் எங்கிருப்பானெனத் தெரியும்!

இங்கு தான் இருக்கக் கூடும் இன்னொருவன்!

கூடி வந்த தூக்கத்தை தூர வைத்து

அவனைத் தேடியது..

என் கண்ணும் இதயமும்!

கண்ணில் படவில்லை..

வந்து புறப்பட்டு விட்டேன்..

குறுஞ்செய்தி அனுப்பினேன் அவனுக்கு!

மீண்டும் அழைப்பு இன்னொருவனிடமிருந்து!

 

 

ஹலோ… என் ஹலோவிற்கு எதிரொலியாய்

இன்னொரு ஹலோ..

அதற்கு ஒரு எதிரொலியாய்

இன்னொரு ஹலோ..

நிமிர்ந்து பார்த்தேன்..

இரண்டு ஹலோவிற்கும் சொந்தக்காரர்களை!

ஒரு கல்லூரி மாணவி..

ஒரு நடு வயதுக்காரர்..

bike

அவனிடம் சொல்லி விட்டேன்

நான் பேருந்திலேயே வந்து விடுவேனென்று!

 

பேருந்து எண்ணைக் கேட்டான்..

அக்கல்லூரி மாணவி எதிரொலித்தாள்!

ஏன்? இருமுறை சொல்கிறாயென்றான்!

பேருந்து எண்ணைச் சொல்லி முடிக்க

தன் கம்பீர இரும்புக் குதிரைமேலமர்ந்து

எனக்கு சைகை காட்டினான்

பின் தொடர்ந்து வருவதாய்!

நான் அவனை கிளம்பும்படி கெஞ்சினேன்!

அவன் விடுவதாயில்லை..

உள்ளத்தை உஷ்ணப்படுத்தியபடி நின்றான்!

 

ஓட்டுநர் பேருந்தை நகர்த்திய

அந்நொடியில் என் விழிகள்

அவனைத் தேடி ஓடின..

அதற்குள் அவள் நிறுத்துமாறு கதறினாள்..

அக்குரல் என்னை பேருந்துக்குள்

திசை திருப்பி விட்டது!

அச்சத்தம் மட்டுமல்ல..

அவள் மொழியும் தான்..

நான் பேசும் அதே மொழி..

இருந்தாலும் காட்டிக் கொள்ளாமலே

கவனித்தேன் நடப்பதை..

 

 

இன்னும் ஐந்து பேர்

உள்ளே நுழைந்தனர்!

அவளருகே வந்து

ஆளுக்கொரு இருக்கையை பிடித்தனர்!

நடத்துநருக்கும் அவர்களுக்கும்

தொடர்ந்து பல வாதங்கள்!

வாகனம் புறப்படவே இல்லை!

 

 

இன்றோடு முடித்து விடலாம்..

இறங்கி அவனோடு சென்று விடலாமென்றது

ஒரு புறம் இதயம்! மறு நொடி மறுத்தது!

பத்து நிமிடங்கள் ஓடி விட்டன..

அவனிடமிருந்து மீண்டும் அழைப்பு

பதிலில்லை என்னிடம்..

ஆகையால் சைகைகள் செய்தேன்!

என் வாழ்க்கை அவன் கையில்!

அவன் இன்றிங்கு இல்லையென்பது

என் வாழ்வை இவன் கையிலாக்கியது!

 

 

கவனித்துக் கேட்டேன்..

எந்த இடத்தில் இறங்க வேண்டும்

எந்த பயணச்சீட்டு வேண்டுமென்று

அவர்களில் யாரும் முடிவெடுக்காமலே!

மொழி பிரச்சனையில் சிக்கியவாறு..

எழுந்து போக எனக்குள் ஆசை

பிரச்சனை வருமோ என்ற பயம்..

நீ கிளம்பென்று

அவனுக்கு செய்தியனுப்பினேன்!

அவன் கிளம்புவதாயில்லை!

மீண்டும் சைகை செய்தேன்!

அவன் அசைவதாயில்லை..

 

 

முதல் ஹலோவிற்கு சொந்தக்காரி

கவலையுடன் காணப்பட்டாள்

உடன் வந்த அனைவரும்!

நடத்துநர் புலம்பத் துவங்கி விட்டார்!

என் மனம் முன்னும் பின்னுமாய்

முடிவெடுக்க முடியாமல்!

அவனுக்கு தொடர்ந்து எந்நிலையை

குறுஞ்செய்திகளாக்கியபடி நான்!

 

 

இன்னொரு ஹலோவிற்கு சொந்தக்காரர்

நடந்து வந்தார் நடத்துநர் நோக்கி..

அவர் இருவரின் மொழியிலும் பேசி

பயணச் சீட்டுகளை வாங்கிக் கொடுத்தார்!

பேருந்து புறப்பட்டது..

திரும்பிப் பார்த்தேன்..

அவனும் புறப்பட்டான்!

 

இன்னொரு ஹலோவிற்கு சொந்தக்காரர்

அந்த இரு குடும்பத்தாருடன் பேசி

அவர்களுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தார்!

நான் கண்களை மூடினேன்!

அவன் வாகன ஒலி

என் மூளைக்குள் ஒலித்தது!

கண் விழித்துக் கொண்டேன்!

 

 

முதல் ஹலோவிற்கு சொந்தக்காரியாய்

மூன்று ஆண்டுக்கு முன்

தனியே இம்மாநகரில்

கால் வைத்த போது..

இன்னொரு ஹலோவிற்கு சொந்தக்காரனாய்

தன் குடும்பத்தோடு இம்மாநகரில்

கால் வைத்தவன் தான் அவன்..

இரண்டாண்டுகளுக்கு முன்பு

முன்னறிவுப்பு ஏதுமின்றி..

என்னை வரவேற்க காத்திருப்பதாய்

காத்திருந்தவன் தான் இன்னொருவன்..

 

 

அந்த நாள் முதல்..

கடந்த இரண்டு ஆண்டுகளாய்

எனக்கு மட்டுமே தெரிந்த

என் அத்தனை பயணங்களும்

அவனுக்கெப்படி தெரியுது?

அதை அறியவே..

என் எண் இதுவரை

மாற்றப் படாமலே..

அவனுடனான என் உறவு

வெளியிட முடியாக் காரணத்தால்

இதுவரை துண்டிக்கப் படாமலே..

 

 

அவனும் நானும்

முன்னும் பின்னுமாய் பயணித்தபடியே

வாகனங்களின் வேகத்தில்..

இறங்குமிடம் நெருங்கி விட்டது!

வழக்கம் போல் வந்து

பேசத்துவங்குவான்..

மறுக்க முடியாமல் பேசுமந்த சூழல்..

என் சுதந்திரத்தை சூரையாடும்..

அன்றும் அது தானோ நிலை..

அவன் வாகனம் திடீரென மறைந்தது..

 

நிம்மதி பெருமூச்சு..

நான் மட்டுமல்ல..

அந்த பேருந்தில்

வேறு யாரோ ஒருவரும்

பெருமூச்சு விட்டதாய் பிரமை!

 

அனைவரும் அங்கு இறங்கினார்கள்!

நான் அவனைத் தேடினேன்..

அவன் என் கண்ணிலேயே படவில்லை

அவசர நடை நடந்தேன்

என் விடுதி நோக்கி!

அவனுக்கு செய்தியனுப்பினேன்

அவனை இடையிலேயே காணவில்லையென்று!

karuveli_irobot

 

 

திடீரென மூளைக்குள் ஏதோ ஒன்று

முதல் ஹலோவிற்கு சொந்தக்காரியும்

அவள் குடும்பமும்..

இன்னொரு ஹலோவிற்கு சொந்தக்காரரும்

இங்கு இறங்கத்தான் பயணச் சீட்டு எடுத்தார்களா?

இடையில் இவன் எங்கு போனான்?

 

 

மூளைக்குள் மணியடித்தது

அய்யகோ.. மறுபடியும் அவனழைப்பு..

அழைப்பை ஏற்றேன்..

இன்னும் எத்தனை நாளைக்கு

இது சாத்தியமென்று பார்ப்போமென்றான்!

நான் வாய் திறப்பதற்குள்…

மூன்றாம் குரல் ஒலித்தது..

“இனி எல்லாம் சாத்தியமே”..

அதுவும் எனக்கு பழக்கமான குரல்..

என் அடி வயிற்றில் ஏதோ செய்தது..

அவனோடு என் பயணத்தில்..

நான்காவதாய் யாரது?

 

 

மறுமுனையில்..

அவன் கத்தினான்..

என்ன குரல் மாத்தி பேசுறீயா?

அவ்வளவு தைரியமாயிடுச்சா?

 

 

நடு வீதியில் நின்றிருந்த

அவன் இரும்புக் குதிரை

அதுவாய் இயக்கத்தை துவங்கியது..

அவன் கைபேசி ஒரு முறை

பளிச்சென்று சிரித்தது!

“இனி எல்லாம் சாத்தியமே” – என்ற

செய்தியோடு..

 

 

(தொடரும்)

 

நன்றி –  கூகுள் இமேஜஸ், Pixlr, பயண அனுபவங்கள்

கருவெளி ராச.மகேந்திரன்

 

அவளுக்குப் பிறந்த நாள்!

long-brown-hair3

PC: Amber Bauerle

அவளுக்குப் பிறந்த நாள்!

அவளோடு அவள் குடும்பமும்

ஆனந்தமாய் குதுகூலமாய்

அதிகாலையில் விழித்திருந்தது!

 

அன்று மட்டுமல்ல!

அவள் கேட்ட அத்தனையும்

அவளுக்கு கிடைக்கும்

அவள் கேட்கும் போதெல்லாம்!

 

அவளுக்குப் பிடித்த

அருமையான இசையோடு

அதிகாலையிலேயே புறப்பட்டது

அவள் வீட்டு வாகனம்!

 

அப்போது தான்

அம்மண்ணில் நானும்

அடியெடுத்து வைத்தேன்!

அவளை எனக்குத் தெரியாது!

 

அவளுக்கும் தெரியாது

அங்கிருக்கும் யாருக்குமே தெரியாது

அன்றெங்கள் சந்திப்பு நிகழுமென!

அந்நிகழ்களம் எனக்கும் தெரியாது!

 

அவளுக்கு முன்

அந்நிகழ்களத்தில் நானிருந்தேன்!

அவள் வந்தாள்

அம்மண்ணில் தேவதையாய்!

 

அனைவருக்கும் இனிப்புகள்

அவள் கையால் எனக்கு மட்டும்

அதிகமாய் இரண்டு

அதுவே முதல் சந்திப்பு!

அவள் விருப்பப்படி

அந்தக் கொண்டாட்டம்

அந்நிகழ்களத்தில் என்றது

அவள் குடும்பம்!

 

அவளைப் பாராட்ட

அவளை நோக்கி ஓடினேன்!

அவள் கை பற்றி

அவளுக்கு வாழ்த்துச் சொன்னேன்!

 

அதற்குள் உணவுக்கழைப்பு..

அங்கிருந்த அனைவரும்

அவரவர் தட்டுடன்

அங்கு வந்தமர்ந்தனர்!

 

அவள் இனிப்பு வைக்க

அவளோடு நானும்

அவளாகி உணவு பரிமாறினேன்!

அவ்வப்போது அவள் புன்னகை பரிசுடன்!

 

அனைவரும் அமர்ந்தாச்சு

அனைவருக்கும் பரிமாறியாச்சு

அப்புறமென்ன காத்திருப்பு?

அந்த எண்ணம் மறைவதற்குள்!

 

அவன் துவங்கினான்

அற்புதக் குரலில்

அந்த இறைப்பாடலை!

அது நன்றிகளுடன் துவங்கியது!

 

அந்தப் பாடல்

அக்குடும்பத்திற்கு நன்றியையும்

அவளுக்கு வாழ்த்துக்களையும்

அற்புதமாய் வழங்கியபடியே!

 

அவன் குரலும்

அவ்வரிகளும் அனைவரையும்

அன்பால் கட்டி

அருவியால் நிறைத்தது கண்களை!

அஞ்சு வயசில்

அவளுக்கு யார் சொன்னது?

அவள் பிறந்த நாளை

அநாதைகள் இல்லத்தில் கொண்டாட!

 

அவனுக்கு யார் கொடுத்தது?

அந்தக் குரலை!

அனைவரையும் உருக்கும்

அந்த வரிகள் எவருடையது?

 

அவள் மறுபடியும் வந்தாள்

அவனோடும் இனிப்புகளோடும்

அம்முறை வாய் திறந்தாள்

அண்ணாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க!

 

அன்று தான் கண்டெடுத்ததார்களாம்

அவனை அவ்வில்லத்தார்!

அடுத்த வார்த்தைக்குள்

அவள் அவனை அழைத்து சென்றாள்!

 

அனைவரும் அழுதும்

அந்தப் பிறந்த நாளின்

அற்புத நினைவுகள்

அக்கணத்தினதாய் இக்கணத்திலும்!

 

அக்கண்ணீர் அனைவரின்

அழுக்குகளையும் கழுவியிருக்கும்!

அன்பால் வரும் கண்ணீர்!

அகிலத்தை இதுவரை காத்திருக்கிறது!

 

(தொடரும்)

 (ஒரு சிறு விண்ணப்பம்:  இக்கவிதை உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதப் பட்டது.  உங்களுக்கு இக்கருத்தில் உடன் பாடிருந்தால்..  உங்கள் பிறந்த நாளை அல்லது உங்கள் வீட்டில் உள்ளோரின் பிறந்த நாளை குழந்தைகள் காப்பகத்திலோ, முதியோர் இல்லத்திலோ கொண்டாடலாமே)

அன்புடனும் நன்றிகளுடனும்

கருவெளி ராச. மகேந்திரன்

புகைப்படம் நன்றி : கூகுள் இமேஜஸ்

பாடம்

அழகிய இறகென்று

கையிலெடுத்தேன்!

பறவையாய் வந்தமர்ந்தாய்!

அழகிய கூடொன்று எடுத்தேன்!

ஆகாயம் நோக்கி

அற்புதமாய் சிறகடித்தாய்!

சுதந்திரப் பாடம் சொல்லி!

உலகப் பாடம்