பொங்கல் – தமிழன் கொண்டாட்டம் !

கதகதப்பை தேட தூண்டும்
அதிகாலை மஞ்சு மூட்டங்கள் மட்டுமல்ல
சுவாசிக்கும் காற்றிலெங்கும்
கண்ணீர் புகையின் நெடியும்
ஓயாது சடலங்கள் எரியும் சுடுகாட்டின் நெடியும்
என் நாசியெங்கும்!

குங்குமம் வைத்து எப்போதும்
இலக்குமியாய் காட்சி கொடுத்த
என் தாய்மார்களின் நெற்றி பொட்டு
குண்டுகளால் துளைக்கப்பட்டு
குருதி சிந்தும் காட்சி
என் விழியெங்கும்!

குருதியும் வேர்வையும் சிந்தி
உழைத்தவர்களின் உடல்களும்
குருதியும் அதே வயல்வெளிகளில்…
கொல்லிவைக்க பிள்ளைகள் தேவையில்லாவண்ணம்
பச்சை பயிர்களுடன் சேர்ந்து பற்றி எரிகின்றன…
அது இம்மண்ணின் மைந்தர்களின்
அணுகுண்டு ஆசியென்ற செய்தி மட்டும்
என் செவியெங்கும்!

சமாதானமாய்… சமமாய்…
எப்போதும் நான் கேட்ட
கோயில் மணி ஓசையும்
ஆலயமணியுடனான ஆசிர்வாத செய்தியும்
அல்லாஹீ என்ற ஓதலும்…
எப்போதும் வெடிக்கும் குண்டுகளின்
சப்தத்தில் காணாமல் போயின!
அவற்றை மீட்டெடுக்கும் கனவுகள் மட்டும்
என் நினைவெங்கும்!

தாய்மையை போற்றும் வழியில் வந்த
என் குலப்பெண்கள் பலரும்
தாசிகளாக்க படுகிறார்கள்
நினைவிழந்து கிடக்கும் அவர்கள்
நேரே போராட திராணியில்லாத
பெட்டைகளால் மீண்டும் மீண்டும் சீரழிக்கப்பட்டு!

இத்தனைக்கும் நடுவில் நான் மட்டும்
பதுங்கு குழிகளிலும்
அடர்ந்த மர கிளைகளிலும்
மறைந்து வாழ்ந்து…
என்ன செய்கிறேன் என்பது தானே
உங்கள் கேள்வி!

நாளை என் பிறந்த நாள்…
உயிர்கள் தோன்றியதாய்…
என் தமிழினம் கொண்டாடும்
தமிழர் திருநாளில் பிறந்தேன்…

தாயிடமிருந்து அவளின் தொப்புள் கொடியிலிருந்து..
பிரித்து என்னை சுத்தம் செய்ய
எடுத்து சென்ற பணிப்பெண்
திரும்பி வந்து பார்த்தது
அணுகுண்டு வீழ்ந்து சிதறிய
குழிக்குள் சாம்பலாகி போன என் தாயைத்தான்!

அதனால் என்ன?
நாளை என் பிறந்த நாள்…
இத்தனை நாட்களாய் இனிப்பு பொங்கலும்
தித்திக்கும் கரும்பையும் மட்டுமே
சுமக்க வாய்ப்பு கிட்டியவன்…
கனரக துப்பாக்கிகளும்…
தோட்டா ரவைகளும்…சுமந்து
இம்மண்ணின் விடுதலைக்கு
போராட வாய்ப்பு கிட்டும்…
வயது பிறக்கும் இனியநாள்…

யார் சொன்னது? என் இனத்தை கூண்டோடு
அழித்திட துடிக்கும் என் எதிரிகளுக்கு
என் பிறந்தநாள் பற்றியும்…
நாளைய தமிழர் திருநாள் பற்றியும்..
வானத்திலிருந்து குண்டு மழை பொழிந்து
ஆசிர்வதிக்கிறார்களே!

பாவம் அவர்கள் அஞ்சியிருக்க கூடும்
நாளை முதல் என் கையில்
தமிழர் திருநாளிலும்
கரும்புக்கு பதில் கனரக துப்பாக்கிகளும்…
மனமெங்கும் வேட்டையாடும்
புலியின் வேகமும் இருக்கும் என்ற
செய்திகிட்டி…

தமிழ் பூமியே…
எனக்கு மட்டும் தான் இந்த வாய்ப்பு…
அதனால்
அமைதியாகவும்… அன்பாகவும்…
நீங்கள் கொண்டாடுங்கள் நமது திருநாளை!
எனது வாழ்த்துக்கள்…
வாழ்வின் உரிமையை மீட்டெடுக்க
போராடும் மக்களின் சார்பாக!

எனக்கு வாழ்த்து சொல்ல
விரும்பினால்…
இறுதி மூச்சு உள்ளவரை…
இம்மண்ணின் விடுதலைக்கு போராட
எனக்கு வாய்ப்பு கிட்டட்டும் என்பதை மட்டும்
வாழ்த்தாய் அனுப்புங்கள்
அன்புடன் ஏற்று கொள்கிறேன்!


இப்படிக்கு…

நாளைய விடியலுக்காகவும்
என் மண்ணிற்காக போராடும் வாய்ப்பிற்காகவும்
வெடிக்கும் குண்டுகளில் தப்பித்து காத்திருக்கும்
தமிழன்!