என்ன பட்டம் கொடுக்கும்?

உன் தோல் தேவைகள் முடிந்ததும்
உன் தேவதை தேவையற்று போகிறாள்!

உன் தோல் தேவைகளுக்காகவா?
உன் தோளோடு தோள் சேர்த்து
இத்தனை கணங்கள் தோழமை பாராட்டினாய்!?


உன் தோல் தேவைகளுக்காக
எத்தனை தேவைதைகளோடு
தோழமை கூறி கூச்சமின்றி சுற்றி வருவாய்?
இந்த வையகத்தே!

உன் தோல் தேவைகள் முடிந்ததும்
உனக்கு தேவையற்று போன தேவதை..
அதற்கான வேதனைகளோடு…
வேசியென்ற பட்டத்தையும்
சுமந்து வாழ்கிறேன்… மண் மீது பிணமாய்…
உன்னை தவிர வேறொருவரையும் நாடியதில்லை என்றாலும்…

என்னை போன்ற இன்னொருத்தி…
என்னை விழித்தெழச்செய்து கேட்டாள்…
இன்று அதிகாலை…
“ஒருவனை தவிர எவனையும் தேடாத
நமக்கு “வேசிகள்” என்று பட்டம் கொடுக்கும்
இச்சமுதாயம்…
நாளும் தோல் சுகம் தேடித்திரியும்
இவன்களுக்கு என்ன பட்டம் கொடுக்கும்?”
என்று..

அவள் சென்று விட்டாள்…
நான் தேடுகிறேன்….
எனக்கு தெரிந்த தாய் மொழியில்…
வேசிக்கு ஆண்பால் என்னவென்று?

எனக்கு பட்டம் கொடுத்த சமுதாயம்
வேசிக்கு ஆண்பால் என்னவென்று சொன்னால்
நல்லதே!